RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (2024)

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (1)

பட மூலாதாரம், Getty Images

கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி.

ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.

  • சச்சின் டெண்டுல்கரின் 'தகர்க்க முடியாத' சாதனைகள் என்னென்ன?

  • சிங்கத்தின் ராஜதந்திரங்கள் அதன் கோட்டையிலேயே தகர்ந்தது ஏன்? புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே எங்கே?

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (2)

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும்.

ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது.

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (3)

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும்.

ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர்.

அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது.

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (4)

பட மூலாதாரம், Getty Images

பொறுமையாக ஆடிய கோலி

விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது.

விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான்.

கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது.

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (5)

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சில் பொறுப்புணர்வு

ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.”

“இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.”

“ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (6)

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது.

ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம்.

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (7)

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.

  • குகேஷ்: சதுரங்கத்தை பொழுதுபோக்காகத் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் தமிழ்நாட்டின் இளம் வீரர்

  • தோல்வி நெருங்கியபோது ரோஹித்திடம் ஹர்திக் கேட்டது என்ன? அடுத்து என்ன நடந்தது?

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (8)

பட மூலாதாரம், Getty Images

பட்டிதார் அளித்த உத்வேகம்

ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார்.

அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

RCB vs SRH: அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? - BBC News தமிழ் (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Dan Stracke

Last Updated:

Views: 6421

Rating: 4.2 / 5 (43 voted)

Reviews: 82% of readers found this page helpful

Author information

Name: Dan Stracke

Birthday: 1992-08-25

Address: 2253 Brown Springs, East Alla, OH 38634-0309

Phone: +398735162064

Job: Investor Government Associate

Hobby: Shopping, LARPing, Scrapbooking, Surfing, Slacklining, Dance, Glassblowing

Introduction: My name is Dan Stracke, I am a homely, gleaming, glamorous, inquisitive, homely, gorgeous, light person who loves writing and wants to share my knowledge and understanding with you.